

நிர்பயா வழக்கில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டமிட்டு ஆம் ஆத்மி அவதூறு கிளப்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.
இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார்.
டெல்லி நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் வரும் 22-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிபதி சதீஸ் குமார் அரோரா உத்தரவிட்டார்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
‘‘நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை ஆம் ஆத்மி தடுப்பதாக திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆம் ஆத்மியே, டெல்லி அரசோ நிர்பயா வழக்கில் எந்த தலையீடும் செய்யவில்லை. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுவது தவறானது.
வேண்டுமென்றே எங்களுக்கு எதிராக அவர் அவதூறை கிளப்புகிறார். அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.’’ எனக் கூறினார்.