Last Updated : 17 Jan, 2020 07:36 PM

 

Published : 17 Jan 2020 07:36 PM
Last Updated : 17 Jan 2020 07:36 PM

அரசு வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அனைத்தையும் மின்னணு வாகனமாக மாற்றக் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,

அரசு வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அனைத்தையும் மின்னணு வாகனங்களாக மாற்றவும், தேசிய மின்னணு வாகன இயக்கத் திட்டத்தை (என்இஎம்எம்பி-2020) படிப்படியாகச் செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்தப் பொதுநல மனுவை சிபிசிஎல், காமன் காஸ் அன்ட் சீதா ராம் ஜின்டால் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தாக்கல் செய்திருந்தனர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

"கடந்த 2012-ம் ஆண்டு என்இஎம்எம்பி அளித்த பரிந்துரைகளின்படி, நாட்டின் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்தவும், காற்று மாசைக் குறைக்கவும் மின்னணு வாகனங்களுக்கு மாற வேண்டும். அரசு வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அனைத்தையும் படிப்படியாக மின்கலத்தில் ஓடும் விதமாக மாற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

ஆனால், கொள்கைகளை வகுத்த மத்திய அரசு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மின்னணு வாகனங்கள் அதிகமாக அறிமுகமாக வேண்டும். அதை சார்ஜ் செய்யும் வசதிகள் இன்னும் முழுமையாக வரவில்லை. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்க அறிவுறுத்தியது. ஆனால், எந்த விதமான பதிலும் இல்லை.

மின்னணு வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு போதுமான ஆர்வம் காட்டவில்லை. என்இஎம்எம்பி திட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் 70 லட்சம் வாகனங்களை மின்கலத்தில் இயக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் அதில் 25 ஆயிரத்துக்குள்ளாகவே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக அரசுப் பேருந்துகள், அரசு வாகனங்களை மின்கலத்தில் இயக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்இஎம்எம்பி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, 4 வாரங்களுக்குள் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த மனுவுக்குப் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x