Published : 17 Jan 2020 07:20 PM
Last Updated : 17 Jan 2020 07:20 PM

அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா: 20-ம் தேதி அறிவிப்பு?

பாஜகவின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா 20-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இதனால் விரைவில் பாஜக புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வரும் 20-ம் தேதி தேசியத் தலைவர் தேர்தல் முறைப்படி நடத்தி அன்றைய தினமே அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஜே.பி. நட்டா தலைவர் என ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மோடி அரசியல் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த நட்டா இந்த முறை அமைச்சரவையில் இல்லை.

இமாச்சலப்பிரதேசத்தின் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜே.டி நட்டா, பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையை ஜே.பி.நட்டா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

56வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப்பிரதேச பாஜக அரசிலும் அமைச்சராவக இருந்தவர், கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். எந்தவிதமான சிறிய விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர் என்பதால் இந்த பதவிக்கு நட்டா தேர்வு செய்யப்படவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x