சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்; இந்திய ரயில் பெட்டிகளைத் திருப்பி அனுப்பாமல் பயன்படுத்தும் பாகிஸ்தான்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்; இந்திய ரயில் பெட்டிகளைத் திருப்பி அனுப்பாமல் பயன்படுத்தும் பாகிஸ்தான்
Updated on
1 min read

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பின், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடைசியாக லாகூர் சென்ற ரயில் பெட்டிகளைத் திருப்பி அனுப்பாமல் பாகிஸ்தான் ஆறு மாதங்களாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே சென்றுவர சம்ஜோதா எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் ஒரு ரயில் சேவை உள்ளது. டெல்லியில் இருந்து பஞ்சாபின் அட்டாரி வழியாக இது பாகிஸ்தானின் லாகூருக்குச் சென்று வருகிறது.

ஒவ்வொரு முறையும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் எழும்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவை தடைபடுவது வழக்கமாகி விட்டது. இந்த ரயிலில், வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் பாகிஸ்தான் அரசின் ரயில் பெட்டிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மீதமுள்ள ஆறு மாதங்களில் இந்திய ரயில் பெட்டிகளும் அதன் பயணிகள் சேவைக்காகப் பயன்படுகிறது. இந்த ரயில் சேவை நிறுத்தப்படும்போது அந்தப் பெட்டிகள் தம் நாட்டு அரசிற்குத் திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும்.

இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே எழுந்த பதற்றம் காரணமாக சம்ஜோதா ரயில் சேவை ஆகஸ்ட் 9 முதல் நிறுத்தப்பட்டது.

அப்போது அதில், இந்திய அரசின் 11 ரயில் பெட்டிகள் சம்ஜோதா எக்ஸ்பிரஸின் பயன்பாட்டில் இருந்தன. இவை பயணிகளுடன் ஆகஸ்ட் 7-ல் தம் கடைசிப் பயணத்தில் லாகூருக்குச் சென்று விட்டன. இத்துடன் 10 சரக்குகள் ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டிகளும் இருந்தன.

எனினும், இவற்றை வழக்கத்திற்கு மாறாக பாகிஸ்தான் அரசு திருப்பி அனுப்பவில்லை. மாறாக அந்தப் பெட்டிகளையும் கடந்த ஆறு மாதங்களாக தம் நாட்டு மக்களின் சேவையில் பயன்படுத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அட்டாரி ரயில் நிலைய அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''பாகிஸ்தானிடம் இருந்து திருப்பி அனுப்பப்படாத நம் ரயில் பெட்டிகள் குறித்து மத்திய ரயில்வே துறைக்குப் புகார் அனுப்பப்பட்டு விட்டது. இதை திருப்பி அனுப்புவதில் பாகிஸ்தானும், திரும்பப் பெறுவதில் இந்திய அரசும் கவனம் செலுத்தாமல் உள்ளன'' எனத் தெரிவித்தனர்.

இரு நாடுகளை மட்டுமல்ல, இரு நாட்டு மக்களின் மனங்களையும் ஒன்று சேர்ப்பதற்காக ஜூலை 22, 1976 முதல் விடப்பட்ட ரயில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ். டெல்லியிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகரம் வரை செல்லும் இந்த ரயில் இரண்டு பகுதிகளாக விடப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையின் அட்டாரி ரயில் நிலையம் வரை ‘அட்டாரி எக்ஸ்பிரஸ்-சம்ஜோதா ஸ்பெஷல்’ என்ற பெயரிலும், அட்டாரியிலிருந்து லாகூர் வரை ‘சம்ஜோதா எக்ஸ்பிரஸ்-லாகூர் ஸ்பெஷல்’ எனவும் அழைக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2007-ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடந்தது. இதில், 66 பயணிகள் கொல்லப்பட்டதுடன் 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in