

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் தொடர்கிறது. ஜனவரி 13-ல் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வலியுறுத்துகின்றனர்.
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டில் முதன்முதலாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இதில், டிசம்பர் 15-ல் நிர்வாக அனுமதியுடன் உள்ளே நுழைந்த போலீஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இதற்காக அலிகரின் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் ஜனவரி 12 வரை பல்கலைக்கழகத்திற்கு விடுப்பு அறிவித்திருந்தது. 13 ஆம் தேதி ஒவ்வொரு பாடப் பிரிவாக மீண்டும் திறக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, பல்கலைக்கழகம் திறந்து ஐந்து நாள் முடிந்தும் மாணவர்கள் தமது வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர். இத்துடன் தாம் தொடரும் போராட்டத்தில் தன் துணைவேந்தரை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், ''டிசம்பர் 15 இல் நடைபெற்ற சம்பவத்திற்கு துணைவேந்தரான பேராசிரியர் தாரீக் மன்சூர் மற்றும் பதிவாளரான அப்துல் ஹமீத் ஐபிஎஸ் ஆகியோரே காரணம். இதனால், அவர்கள் தம் பதவியில் இருந்து விலகும் வரை நாம் வகுப்புகளைப் புறக்கணிப்போம்'' எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் நாள்தோறும் போராட்ட ஊர்வலம் வளாகத்தினுள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்களுடன் துணைவேந்தர் தாரீக் மன்சூர், முதன்முறையாகப் போராட்டக் களத்திற்குச் சென்று நேற்று காலை சந்தித்தார். இதில், போலீஸாரை வளாகத்தில் அனுமதித்தது குறித்த விளக்கத்தை மாணவர்கள் ஏற்கவில்லை.