Last Updated : 17 Jan, 2020 04:55 PM

 

Published : 17 Jan 2020 04:55 PM
Last Updated : 17 Jan 2020 04:55 PM

கேரளாவில் திடீர் சர்ச்சையான மாட்டிறைச்சி: பாஜக எம்.பி., நெட்டிசன்கள் கண்டனம்; சமாதானப்படுத்திய அமைச்சர்

கேரளாவில் மகர சங்கராந்தி பண்டிகையன்று மாட்டிறைச்சி குறித்து கேரள சுற்றுலாத்துறை வெளியிட்ட விளம்பரத்துக்கு பாஜக எம்.பி.யும், நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்துச் சமாதானப்படுத்தினார்.

மகர சங்கராந்தி பண்டிகை நாளான நேற்று கேரள சுற்றுலாத்துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மாட்டிறைச்சி வறுவல் (பீஃப் உலர்த்தியது) எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும், கேரள மாநிலத்தின் சிறந்த உணவுகளில் மாட்டிறைச்சி வறுவலும் முக்கியமானது என்ற வகையிலும் அந்த ட்வீட் இருந்தது.

ஆனால், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு, லோஹ்ரி என இந்த தை மாத முதல் நாள் இந்துக்களின் புனித பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனித நாளில் மாட்டிறைச்சி வறுவல் குறித்த கேரள சுற்றுலாத்துறையின் விளம்பரம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்துவிட்டது என்று கூறி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், பலரும் ஆதரித்து பதில் ட்வீட்களும் செய்தனர்.

இதனால் நேற்று ஒரே நாளில் கேரள சுற்றுலாத்துறை குறித்த ட்வீட் தொடர்பாக மாட்டிறைச்சி விவகாரம் பரபரப்பானது.

இதற்குக் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி தொகுதி பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே ட்விட்டரில் கேரள அரசைக் கண்டித்துக் கூறுகையில், "கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு இந்துக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறது. மாட்டிறைச்சியைப் புனிதப்படுத்தி இந்துக்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மனது, நோயுடன் இருப்பதையே காட்டுகிறது. கம்யூனிஸம் என்பது நோய், கேரளா சுற்றுலாத்துறையைப் பார்த்து வெட்கப்படுகிறேன்" எனக் கண்டித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் : படம் ஏஎன்ஐ

இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனிடம இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " கேரள சுற்றுலாத்துறை கேரளாவில் புகழ்பெற்ற உணவான மாட்டிறைச்சி வறுவல் (பீஃப் உலர்த்தியது) குறித்து ட்வீட் செய்ததற்குச் சிலர் மதச்சாயம் பூச முயல்கிறார்கள்.

பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளைக் கேரளாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இன்று நடப்பவை அனைத்தும், வகுப்புவாத நோக்கில் உருவாக்கப்படுகின்றன. ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். கேரளாவின் உணவுக்கும், மதத்துக்கும் எந்தவிதத்திலும் தொடர்பில்லை. இந்த விவகாரத்தைப் பெரிதாக்குவது தேவையில்லாத ஒன்று.

சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் பன்றி இறைச்சி குறித்த குறிப்புகளும் இருந்தாலும், 35 லட்சம் பேர் ஃபேஸ்புக்கிலும், 18 லட்சம் பேர் ட்வி்ட்டரிலும் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். எந்த மாநிலத்திலும் கேரள சுற்றுலாத்துறைக்கு இருக்கும் வரவேற்பு போல் இல்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x