

மகளிர் உரிமைகள் குழுக்களும், பெண்ணியவாதிகளும் மரண தண்டனை விதிப்புகளுக்கு தங்கள் எதிர்ப்பை மீண்டுமொரு முறை வலியுறுத்தியுள்ளனர். குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மரண தண்டனையாக இருக்க முடியாது என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சஹேலி மகளிர் ஆதார மையம், தி பெமினிஸ்ட் கலெக்டிவ், அனைத்திந்திய மகளிர் முன்னேற்ற கூட்டமைப்பு உள்ளிட்ட மகளிர் உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் தாய் தந்தையர், அன்புக்குரியவர்களின் தவிர்க்க, தடுக்க முடியா வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே வேளையில் தேசத்தின் கவுரவம் என்ற பெயரில் இப்படிப்பட்ட மரண தண்டனைகள்தான் இத்தகைய குற்றங்களுக்கு ஒரே வழி என்பது போல் அரசியல்வாதிகள், கட்சிகள், பிற சுயநலமிகள் இவர்களின் வலியை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பிரபல மகளிர் உரிமைகள் குழு உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்களும் இந்த மனுவிற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இதில் மேரி ஜான், நிவேதிதா மேனன், சுனீதா தார், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
நிர்பயா கொலை வழக்கு மரண தண்டனை குற்றவாளியான முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு முன்பாக இவர்கள் தங்கள் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த மனுவில் மரண தண்டனை என்பது நீதி மாயைதானே தவிர நீதியல்ல. குற்றநீதி அமைப்பு, செயல்பாடுகளின் தோல்வியைத் திசைத்திருப்ப வழங்கப்படுவதே மரண தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு குற்றவாளியையும் சமத்துவத்துடன் அணுகும் நேர்மையும், நியாயமும், திறனும் குற்றத்தீர்ப்பு நீதியமைப்புக்கு இருந்தால்தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும். அதாவது குற்றவாளிகளின் சாதி, சமூக அந்தஸ்து, அதிகார நிலை, வர்க்கம், என்ற பேதங்கள் இல்லாமல் குற்றத்தீர்ப்பு நீதி அமைப்பு செயல்படுவது அவசியம். மாறாக அரசு என்ன செய்கிறது எனில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு தூக்கு மற்றவர்கள் இதே குற்றத்தைச் செய்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற ரீதியில் ‘நீதி போன்ற மாயை’யை உருவாக்கி நம் கவனத்தைச் சிதறடிக்கிறது. ” என்று மகளிர் அமைப்புகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.