Last Updated : 17 Jan, 2020 12:49 PM

 

Published : 17 Jan 2020 12:49 PM
Last Updated : 17 Jan 2020 12:49 PM

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியுரசுத் தலைவர்; 22-ம் தேதி தூக்கு தண்டனை உறுதியா?

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி அனுப்பிய கருணை மனுவை குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதனால், வரும் 22-ம் தேதி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து இன்று மாலை டெல்லி விசாரணை நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.

இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் : கோப்புப்படம்

இதற்கிடையே குற்றவாளிகளுக்கான தண்டனையை விரைவாக நிறைவேற்ற உத்தரவிடக் கோரி நிர்பயாவின் தாயார் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் நேற்று தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார்.

சிறை விதிமுறைப்படி, தூக்கு தண்டனைக் கைதி ஒருவர் கருணை மனுத் தாக்கல் செய்தால், அந்த மனுவுக்குப் பதில் கிடைக்கும் வரை அதாவது, குடியுரசுத் தலைவர் அந்த மனு மீது முடிவு செய்யும் வரை தண்டனை நிறைவேற்றப்படாது.

இந்நிலையி்ல் மத்திய உள்துறை அமைச்சகம் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது. அதோடு கருணை மனுவை நிராகரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி அனுப்பி இருந்தது.

முகேஷ் சிங்கின் கருணை மனுவைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்த மனுவை நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வரும் 22-ம் தேதி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று மாலைக்குள் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x