

வியாபம், லலித் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த நோட்டீஸை அனுமதிக்க முடியாது என அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் நிராகரித்து விட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, “பிரதமர் பதிலளிக்கும்வரை ஒவ்வொரு நோட்டீஸையும் புதிதாகவே கருத வேண்டும்” என்றார். அப்போது, “நான் விவாதத்தை அனுமதிக்கத் தயார். தீர்மானம் கொண்டு வர நீங்கள் தயாரா” எனக் கேள்வியெழுப்பினார். ஆனால், பிரதமர் அவைக்கு வராமல் விவாதத்துக்கு அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.