

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் இரு முக்கிய கட்சிகளாக உள்ளன. தலைநகர் அமராவதி விவகாரத்தில் இரு கட்சிகளும் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளன. அரசின் 3 தலைநகர திட்டத்துக்கு எதிராக விஜயவாடா, குண்டூர் பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் தனித்து செயல்பட்டு வரும் பாஜகவும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
விஜயவாடாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாஜ மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா மற்றும் நடிகர் பவன் கல்யாண் தலைமையில் இரு கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பிறகு நடிகர் பவன் கல்யாண் கூறும்போது, “மாநில மக்களின் நலனுக்கு நாங்கள் இணைந்து போராட முடிவு செய்துள்ளோம். வரும் 2024-ல் ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற இரு கட்சிகளும் இணைந்து செயல்படும்” என்றார்.