காஷ்மீரில் கடும் நிலச்சரிவு: 7000 வாகனங்கள் ஸ்தம்பித்தன

காஷ்மீரில் கடும் நிலச்சரிவு: 7000 வாகனங்கள் ஸ்தம்பித்தன
Updated on
1 min read

கடும் நிலச்சரிவினால் ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்காவது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 7000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. ராம்பான் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து இடங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு போலீஸ் அதிகாரி கூறுகையில், “திக்டோல், மங்கி மார்க், மவும்பசி, பந்தியால், சந்தேர்கோடி ஆகிய இடங்களில் புதன்கிழமை நள்ளிரவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்து கற்கள் சரிந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சாலையில் கொட்டிக்கிடக்கும். மணலையும் கற்களையும் இயந்திரங்கள் கொண்டு பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுவருவதால் அப்புறப்படுத்தும் பணி மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் பகுதியின் நெடுஞ்சாலைகளில் குவிந்திருக்கும் பனி மிகப் பெரிய போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால் கத்துவா மாவட்டத்தின் லக்கன்பூரில் இருந்து ராம்பான் மாவட்டத்தின் பனிகல் வரை உள்ள நெடுஞ்சாலையிலும் காஷ்மீரை ஒட்டியுள்ள சாலைகளிலும் 7000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தங்களுடைய வாகனங்களை ஓட்டமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் லாரி ஓட்டுநர்கள் சாப்பாடுகூட வாங்க முடியாத அளவுக்கு தங்களுக்குப் பண நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசு நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பொது இடங்களில் பொது சமயலறைத் திட்டத்தை அரசு ஏற்பாடு செய்யத்தவறியதாகவும் கூறியுள்ளனர். ஏற்கெனவே 6 நாட்கள்வரை காஷ்மீர் பகுதியிலேயே தாங்கள் முடங்கிவிட்டதால் ஜம்மு நோக்கிச் செல்ல நெடுஞ்சாலைகள் வேகமாகச் சீரமைக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in