Published : 16 Jan 2020 08:34 PM
Last Updated : 16 Jan 2020 08:34 PM

காஷ்மீரில் காவல்துறை தேடுதல் வேட்டையில் 5  ஜெய்ஷ்  தீவிரவாதிகள் கைது: குடியரசு தின தாக்குதல் திட்டம் தகர்ப்பு என போலீஸ் தகவல்

காஷ்மீரில் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். குடியரசு தின தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26-ம் தேதி நாடு முழுக்க குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காஷ்மீரில் காவல்துறை நடந்த ரகசிய ஆப்ரேஷன் ஒன்றில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லோரும் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பெயர் ஐஜாஸ் அகம்ட் ஷேக், உமர் ஹமீது ஷெய்க், இம்தியாஸ் அகமது சிக்லா என்கிற இம்ரான், சாஹில் ப்ரூக் கோஜ்ரி, நசீர் அகமது மிர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பால் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

உதவி தலைமை ஆய்வாளர், டிஐஜி வி.கே.பர்டி கூறும்போது தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள், பெரிய அளவிலான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன,
என்றார்.

143 ஜெலட்டின் ராடுகள், சைலன்சர் ஒன்று, 42 டெடொனேட்டர்கள், ஐ.இ.டி., வாக்கி டாக்கி மற்றும் சிறு ஆயுதங்கள் ஆகியவை இவர்களிடமிருந்துக் கைப்பற்றப்பட்டன.

லஷ்கர் தீவிரவாதி கைது:

தெற்கு காஷ்மீரின் அவந்திபுராவில் போலீஸார் லஷ்கர் தீவிரவாதி ஒருவரை கைது செய்தனர். இஃப்ஷக் அகமத் தார் என்கிற மகீத், இவர் தாங்கர்போரா, பட்கம்போரா பகுதியைச் சேர்ந்தவர். அப்பாவி மக்களை அச்சுறுத்தியதாக இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x