Published : 16 Jan 2020 02:23 PM
Last Updated : 16 Jan 2020 02:23 PM

இந்தியாவை விமர்சிக்கும் முன் உங்கள் முதுகைப் பாருங்கள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம் 

இந்தியா எதிர்கொள்ளும் பயங்கரவாதம், பிரிவினை வாதம், குடியேற்றம் ஆகிய பிரச்சினைகள் மற்ற நாடுகள் எதிர்கொண்டதின் ஒரு தேசிய மாறுபாடுதான் என்று காஷ்மீர் விவகாரம், என்.ஆர்.சி. மற்றும் சிஏஏ எதிர்ப்புகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டு சர்வதேச மாநாடான ரைசினா டயலாக் கூட்டத்தில் அவரிடம் உலக நாடுகள் பல இந்தியா மீது வைக்கும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்ட போது:

“இதே விவகாரங்கள் மற்ற நாடுகளில் எழுந்த போது அவர்கள் எப்படி கையாண்டார்கள்? எப்படி வினையாற்றினார்கள், அவர்கள் பதில் சொல்லட்டும். நம் அண்டை நாட்டு தொந்தரவுகள் குறித்து நாம் மட்டும்தான் இப்படி வினையாற்றுகிறோமா என்ன? ஐரோப்பாவில் இதே சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன, அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. இதற்கெல்லாம் அவர்கள் எப்படி வினையாற்றினார்கள்?

இந்த விவகாரத்தை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் என்பதுதான் என் பதில். குடியேற்றம் குறித்து அவர்கள் என்ன வழிமுறையைக் கையாண்டார்கள்? விமர்சகர்கள் எப்போதும் புள்ளிகளில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பார்க்க வேண்டும்” என்றார்.

ஐநாவில் நிச்சயம் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பும் என்ற நிலையில் ஜெய்சங்கர் இவ்வாறு பேசியுள்ளார்.

“இந்தியா-சீனா உறவுகள் குறித்து சேர்ந்துதான் நாம் பயணிக்க வேண்டும். சவால் என்பது உறவுகள் தரப்பில்தான், உலகப் பொருளாதாரத்தில் நம்பர் 2 மற்றும் 3 என்ற இடத்தில் உள்ள நாடுகள்,, அண்டை நாடுகள் நிலையான உறவுகளுக்குள் செல்லும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் பாதை:

இந்தியாவின் அயலுறவு குறித்துக் கூற வேண்டுமெனில் தொந்தரவு கொடுக்கும் இடையூறு கொடுக்கும் வணிக அல்லது சுய மைய அதிகார நாடாக இந்தியா இருக்காது. நியாயமான அதிகாரமாக விளங்கும். நம்முடையது பன்முகக் கலாச்சாரம் மற்றும் சந்தைப் பொருளாதாரமாகும். அதிக செல்வாக்கு மற்றும் அதிக திறன் மூலம் என்ன மாறியிருக்கிறது எனில் நாம் நம்மை நிச்சயத்தன்மையுடன் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறினார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x