Last Updated : 15 Jan, 2020 06:37 PM

 

Published : 15 Jan 2020 06:37 PM
Last Updated : 15 Jan 2020 06:37 PM

சிஏஏவை திரும்பப் பெறுங்கள்; காங்கிரஸை விட மோசமான முடிவுகளைச் சந்திக்க வேண்டி வரும்: பாஜகவுக்கு மாயாவதி எச்சரிக்கை

சிஏஏவை திரும்பப் பெறுங்கள். காங்கிரஸை விட மோசமான முடிவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று பாஜக அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று எச்சரிக்கை விடுத்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு மூன்று அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்களுக்கு குடியுரிமை பெற எளிதான வழியை அனுமதிக்கிறது. முஸ்லிம்கள் மட்டும் பட்டியலில் இடம் பெறவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி, மீண்டும் தனது அழுத்தமான எதிர்ப்பை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் மாயாவதி. அதை முன்னிட்டு தனது வாழ்க்கையில் கடந்து வந்த நினைவுக் குறிப்பு நூல்களின் ஆங்கிலம் மற்றும் இந்திப் பதிப்புகளை இன்று வெளியிட்டார். அப்போது ''மத்திய அரசு சிஏஏவை திரும்பப் பெற வேண்டும். ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டுமெனில் அனைவரது ஒருமித்த ஆதரவைப் பெற வேண்டும். அதன்பிறகுதான் சட்டம் இயற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''குடிமக்கள் திருத்த மசோதாவை (சிஏஏ) கொண்டு வருவதற்கு முன்பு பாஜக தலைமையிலான அரசாங்கம் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) முதல் பார்வையிலயே மக்களைப் பிளவுபடுத்துவதும் இது அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதாக இருப்பதும் தெரிகிறது. இதில் அரசு பிடிவாதத்தோடு இருப்பது கண்டிக்கத்தக்கது.

பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் மோசமான அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன. ஆளும் கட்சி மீது ஒரு வலுவான எதிர்வினையை இப்பிரச்சினை தூண்டியுள்ளது. கடந்த சில காலமாக, அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று பொய்களைப் பரப்பி வருகின்றன. அழுக்கு அரசியலில் ஈடுபடுகின்றன. இதில் பாஜகவும் காங்கிரஸும் மற்றவர்களை விட முன்னணியில் உள்ளன.

எங்கள் கட்சி பொய்களின் அடிப்படையில் அழுக்கு அரசியலில் ஈடுபடுவதில்லை. கடந்த மாதம் காங்கிரஸ் தொடங்கப்பட்ட 135-வது ஆண்டு விழாவின்போது காங்கிரஸைத் தவிர்த்து, உ.பி.யில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகள் என்.ஆர்.சி மற்றும் சிஏஏவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மத்திய அமைச்சரவை சிஏஏவுக்கு ஒப்புதல் அளித்தபோது, ​​நான் முதலில் ஒரு போராட்டத்தைப் பதிவு செய்தேன். அந்த நேரத்தில் காங்கிரஸும் பிற கட்சிகளும் இது குறித்து மவுனமாக இருந்தன.

மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதுதான் அவர்களின் மவுனம் உடைந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எங்கள் கட்சி அதை எதிர்த்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடுகளை அவர்கள் ஏனோ மறைக்கப் பார்க்கிறார்கள். மத்தியில் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசாங்கத்தை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்ததையும் அவர்களுக்கு இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதில்லை. குற்றம் மற்றும் அட்டூழியங்கள் யாருக்கும் எதிராக நடக்கலாம். எனவே, மத்திய அரசு சிஏஏவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை திரும்பப் பெற வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்பட்டபிறகே ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்,

அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெற்ற பின்னரே அமைதியான போராட்டங்களை நடத்தும் ஒரு ஒழுக்கமான கட்சி எங்கள் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப் பிரதேசத்தில் வீதி ஆர்ப்பாட்டங்களில் சிஏஏ தொடர்பாக வெளிப்படையான போராட்டங்களை நாங்கள் நடத்தினோம்.. பகுஜன் சமாஜ் கட்சி மற்ற அரசியல் கட்சிகளைப் போல அழுக்கு அரசியலில் ஈடுபடாது. இந்த விவகாரத்தில் கட்சி கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்லும் எவருக்கும் வலுவான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நாட்டில் அச்சம் மற்றும் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது நாடு இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது. தற்போதைய பாஜக அரசாங்கமும், காங்கிரஸைப் போலவே பொறுப்பற்றுச் செயல்படுகிறது.

காங்கிரஸைப் போலவே தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நலனுக்காக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக. மேலும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை மீறி வருவதாகத் தெரிகிறது,

இன்று நம் நாடு தவறான மற்றும் எதிர்மறையான காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் உள்ளது. இது தீவிரமாக பரிசீலிக்கவேண்டிய ஒரு தேசியப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சியும் பிற நிறுவனங்களும் பாஜக அரசாங்கத்தின் தோல்வியைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற முயல்கின்றன.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஷரத்துகளை மத்திய அரசு மதித்துச் செயல்படுவதாகத் தெரியவில்லை. இதனால் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் மிகவும் துக்கத்தை எதிர்கொள்கின்றனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் தற்போதைய ஆட்சியில், வறுமை, வேலையின்மை, அராஜகம், வன்முறை மற்றும் பதற்றம் காங்கிரஸ் கட்சியின்போது இருந்ததை விட மிகவும் அதிகமாக உள்ளது. இதில் பாஜகவை விமர்சிக்கும் தார்மீக உரிமை காங்கிரஸுக்கு இல்லை. எங்கள் கட்சி பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் பார்க்கிறது.

ஒன்றை மட்டும் பாஜக கவனமாகப் புரிந்துகொள்ளவேண்டும். காங்கிரஸின் செய்த தவறுக்காக நாட்டு மக்கள் அக்கட்சியைத் தண்டித்திருக்கிறார்கள், தூக்கியெறிந்தார்கள். இந்த காரணத்தினால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் பாஜகவின் மத்திய அரசு, காங்கிரஸ் அரசாங்கத்தின் முறையைப் பின்பற்றி செயல்படுமானால், பாஜவின் முடிவு காங்கிரஸுக்கு ஏற்பட்டதைவிட மோசமாக இருக்கும்’’.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x