Published : 15 Jan 2020 03:52 PM
Last Updated : 15 Jan 2020 03:52 PM

சிவசேனாவின் பெயரை தாக்கரே சேனா என்று மாற்றிக்கொள்ளுங்கள்: சஞ்சய் ராவத்துக்கு சத்ரபதி சிவாஜியின் வாரிசு பதிலடி

கலவரங்களைத் தூண்டிய கட்சிக்கு சிவாஜியைப் பின்பற்றி சிவசேனா என்ற பெயர் எதற்கு? தாக்கரே சேனா என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று சத்ரபதி சிவாஜியின் வாரிசும் முன்னாள் எம்.பி.யுமான பாஜகவைச் சேர்ந்த போசாலே இன்று தெரிவித்துள்ளார்.

சத்ரபதி வீர சிவாஜியோடு மோடியை ஒப்பிட்டு வெளிவந்துள்ள 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்ற புத்தகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் ராவத் மராட்டிய மன்னர் சிவாஜியின் வாரிசுகள் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் மோடியோடு சிவாஜியை ஒப்பிட்ட புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, பாஜக எம்.எல்.ஏ சிவேந்திரராஜே போசாலே மற்றும் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. சம்பாஜி ராஜே உள்ளிட்ட சிவாஜியின் வழித்தோன்றல்கள் கருத்து சொல்லுங்கள் என்று சஞ்சய் ராவத் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்க சத்ரபதி வீர சிவாஜியின் 13-வது சந்ததி வழித்தோன்றலும் முன்னாள் எம்.பி.யுமான போசாலே முன்வந்துள்ளார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு என்சிபி எம்.பி.க்களில் ஒருவர். பாஜகவுக்கு மாறுவதற்காக தனது எம்.பி.பதவியை போஸ்லே ராஜினாமா செய்தார். இருப்பினும், சதாரா மக்களவை இடைத்தேர்தலில் மீண்டும் நின்றார். மூத்த என்சிபி தலைவரும், சிக்கிம் முன்னாள் ஆளுநருமான ஸ்ரீனிவாஸ் பாட்டீலிடம் தோற்றார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பதிலடி வழங்கும்விதமாக போசாலே இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

''பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயால், பிரதமரை சிவாஜியுடன் ஒப்பிடத் துணிந்து 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சிவாஜி மகாராஜ் ஒரு உலகளாவிய உத்வேகம். அவருடன் ஒப்பிடும் அளவுக்கு அவர் உயரத்துக்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரைப் பிரதமருடன் ஒப்பிடும் அளவுக்கு சிலர் தங்கள் தன்னிலை மறந்துவிட்டார்களா?

அது ஒருபக்கம் இருக்கட்டும். பாஜக எம்.எல்.ஏ சிவேந்திரராஜே போசாலே மற்றும் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. சம்பாஜி ராஜே உள்ளிட்ட சிவாஜியின் வழித்தோன்றல்கள் 'ஆஜ் கே சிவாஜி நரேந்திர மோடி' புத்தகம் வெளியிட்டுள்ளது பற்றி கருத்து சொல்லுங்கள் என்று சஞ்சய் ராவத் கேட்கிறார்.

அவரிடம் நான் திருப்பிக் கேட்க விரும்புகிறேன். ''நீங்கள் உங்கள் கட்சிக்கு 'சிவசேனா' என்று பெயர் சூட்டியபோது, எங்களிடம் இதைப் பற்றி கேட்டீர்களா?''

இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மூன்று சேர்ந்து மகாராஷ்டிர விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சிவசேனா கட்சியின் சேனா பவனைப் பாருங்கள். அங்கே பால் தாக்கரே படம் மேலே வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே சத்ரபதி சிவாஜியின் படம் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்று கூறும் சேனா, அதன் பெயரை தாக்கரே சேனா என்று மாற்ற வேண்டும்.

சிவாஜியின் பெயரில் கலவரங்களைத் தூண்டிய கட்சிதான் சிவசேனா. அப்படியிருக்க சிவசேனா என்ற பெயர் எதற்கு, சிவாவை அகற்றிவிடுங்கள். தாக்கரே சேனா என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கட்சியின் தரத்தை அறிந்து எத்தனை இளைஞர்கள் வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எனும் சந்தர்ப்பவாதக் கூட்டணியை உருவாக்குவதில் சஞ்சய் ராவத் என்னென்ன செய்தார் என்பதை நான் அறிவேன். ஆனால் எங்கள் பாஜக அதிகாரத்திற்குப் பின் ஓடவில்லை.

என்சிபி தலைவர் சரத் பவார், அவர் மன்னர் சிவாஜியின் பட்டப் பெயரான ஜாந்தா ராஜா (புத்திசாலி ராஜா) வைப் பயன்படுத்துகிறார். இப்படி யாரோ ஒருவர் செய்தாலும் அது ஒருவகையில் மராட்டிய அரசரைக் குறைகூறுவதற்குச் சமம்தான். அரசியல் வட்டாரங்களில் பவாரைக் குறிக்க பெரும்பாலும் ஜாந்தா ராஜா பட்டப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. சத்ரபதி சிவாஜியின் பெயர் இப்படியெல்லாம் பட்டப்பெயருக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது எந்தவிதத்தில் சரி?''

இவ்வாறு சத்ரபதி வீர சிவாஜியின் 13-வது சந்ததி வழிதோன்றலும் முன்னாள் எம்.பி.யுமான போசாலே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x