

ஜார்க்கண்டில் விபத்தில் அடிபட்ட வயதானவருக்கு சிகிச்சை அளிப்பதில் அண்டை மாநிலமான பிஹாரிலிருந்து ஊழியர்கள் வரும்வரை 2 நாட்கள் தாமதப்படுத்திய அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனைகளுக்கு அடுத்தடுத்த உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
சத்ருகன் சாவோ, வயது 60, பிஹாரைச் சேர்ந்த இவர் ஜார்க்கண்ட் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கு இரண்டு நாட்கள் பிடித்தன. அதுவரையிலும் அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் புகார் கூறினர். அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியும் நோயாளி இன்னும் குணமாகாதததற்கு இது முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயதானவருக்கு சிகிச்சையளிப்பதில் அரசுமருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது முதலமைச்சருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.
14 நாட்கள் ஆகியும் சாவ் குணமடையவில்லை. சோரனின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இங்குள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (ரிம்ஸ்) சாவ் பரிந்துரைக்கப்பட்டார்.
இதுகுறித்து முதல்வர் சோரன் ட்விட்டரில் கூறுகையில், ''அவருக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக, அவரது உறவினர்கள் வந்தபிறகு, அவர்களிடமிருந்து புகாரை பெறும்வரை மருத்துவமனை காத்திருந்தது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த அணுகுமுறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது என்கிறார்கள். இது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்? சிக்கலைத் தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக - ஒவ்வொரு அதிகாரியும் அதை தட்டிக்கழிக்கவே விரும்புகிறார்கள். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஆனால் இனி இந்த நிலைமை மாறும். இந்த அணுகுமுறை இனி பொறுத்துக் கொள்ளப்படாது'' என்றார்.
மற்றொரு ட்வீட்டில் சோரன், ''அனைத்து (அரசு) மருத்துவமனைகளின் நிர்வாகத்தினரும் நோயாளிகளுக்கு உணர்வுபூர்வமாக சிகிச்சையளிக்க வேண்டும் என்று இதன்மூலம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் அடிபட்டவர் யார் என்று தெரியாத நிலையில் அவருடைய அறியப்படாத உறவினர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது, அதைப்பற்றி மருத்துவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதில் மட்டும்தான் மருத்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.'' என்று உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி, நோயாளி சாவோவுக்கு சிகிச்சையளிக்க சோரன் ரிம்ஸ் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி அவருக்கு தற்போது அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்குப் பின்னர் பிஹாரின் நாலந்தா மாவட்டத்தின் ஏகாங்கர் சாரையில் உள்ள நோயாளியின் வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுமாறும் ராஞ்சி துணை ஆணையர் ராய் மஹிமபத் ரேவிடம் சோரன் கேட்டுக்கொண்டார்.
கோடெர்மா மருத்துவமனை தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், ''14 நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் சாவோவை இந்த மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபின், முதியவர் தன்னைப் பற்றி எதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மருமகனை போலீசார் கண்டுபிடித்தனர், அதன்பிறகு மருமகன் அவருடன் தங்கத் தொடங்கினார் . எங்கள் அரசு மருத்துவமனையில் சாவோவுக்கு சிகிச்சையளிக்க தேவையான எலும்பியல் நிபுணரும் இல்லை'' என்றும் அவர்கள் கூறினர்.