

சிஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விளக்கும் பொதுக்கூட்டத்தில் பிஹார் கயாவில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய போது கருப்புப் பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் வானில் பறந்த கருப்புப் பலூன்களைப் பொருட்படுத்தாத யோகி ஆதித்யநாத், “சிஏஏ குடியுரிமையைப் பறிப்பதல்ல, வழங்குவது. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது, மாறாக பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 20%லிருந்து 4%க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தப் புதியச் சட்டம் அம்மாதிரி இந்துக்களுக்கு இடமளிக்கிறது” என்று பேசினார்.
ஆனால் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் பேசிக்கொண்டிருந்த காந்தி மைதானத்தின் வடக்குப்பகுதியில் கூட்டமாக எண்ணற்ற கருப்புப் பலூன்கள் எதிர்ப்புக் காட்டி வானில் எழும்பின. ஆனால் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இதனைப் பொருட்படுத்தாமல் தன் உரையைத் தொடர்ந்தார்.
இந்தக் கூட்டத்தில் பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சஞ்சய் ஜைஸ்வால், பிரேம் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.