

ஜனவரி 22-ம் தேதி எப்போது வரும் என எதிர்பார்த்து இருக்கிறேன் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனையை அண்மையில் உறுதி செய்தது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரில் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் வரும் ஜனவரி 14 அன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர் எஃப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வினய் சர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியதாவது:
இன்று மிக முக்கியமான நாள். நான் எதிர்பார்த்தது போலவே நிர்பயாவுக்கு தவறிழைத்த குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 7 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அவர்கள் தூக்கிலிடப்படும் ஜனவரி 22-ம் தேதி எப்போது வரும் என எதிர்பார்த்து இருக்கிறேன். அன்று தான் மிகச்சிறந்த நாளாக அமையும்’’ எனக் கூறினார்..