Last Updated : 14 Jan, 2020 03:35 PM

 

Published : 14 Jan 2020 03:35 PM
Last Updated : 14 Jan 2020 03:35 PM

உ.பி.யில் பிறந்த புதிய குழந்தையை கடித்துக் கொன்ற நாய்: ஊழியர்கள் அலட்சியத்தால் ஆபரேஷன் தியேட்டருக்குள் அதிர்ச்சி சம்பவம்

ஊழியர்களின் அலட்சியத்தால் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த நாய் ஒன்று புதிய - பிறந்த குழந்தை ஒன்றைக் கடித்துக்கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் உ.பியில் நேற்று நடந்துள்ளது.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய இக்கோர சம்பவத்தை அடுத்து இம்மருத்துவமனைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள் அன்று ரவிக்குமார் என்பவர் தனது மனைவி காஞ்சனாவை பிரசவத்திற்காக சதர் கோட்வாலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அங்கு அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் சி பிரிவுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக மருத்துவஊழியர்கள் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் காஞ்சனாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு, காஞ்சனா வார்டு பகுதிக்கு மாற்றப்பட்டார், ஆனால் குழந்தையை பின்னர் மாற்றுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நடந்த சம்பவங்கள்தான் பிறந்த புதிய குழந்தையை விதியை மாற்றி எழுதும்படி நேர்ந்தது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை இந்த உலகத்தைக் காண இரண்டுமணிநேரம்கூட உயிரோடு இல்லை.

மருத்துவமனைக்கு வெளியே இருந்து ஒரு நாய் மருத்துவமனைக்குள் நுழைந்ததை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அந்த நாய் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளும் சென்றது. ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஒரு நாயை விரட்ட மருத்துவமனை ஊழியர்கள் முயற்சிப்பதை குடும்ப உறுப்பினர்கள் பார்த்துள்ளனர்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து ஒரு நாய் மருத்துவமனை ஊழியர்களை விலக்கிக்கொண்டு செல்வதை தாங்கள் கவனித்ததாகவும், அதனைஅடுத்து, இரண்டு மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும் தங்களிடம் கூறப்பட்டதாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாய் வார்டு பகுதிக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து, குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது, ​​கழுத்து மற்றும பிற பாகங்களில் பல காயங்களுடன் தரையில் இறந்து கிடந்த குழந்தையைத்தான் அவர்கள் காணும்படி நேர்ந்தது.

சுற்றுவட்டாரத்தில் பெரும்அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் மன்வேந்திர சிங் எஃப்.ஐ.ஆருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) சந்திர சேகர் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த மருத்துவமனை பதிவு செய்யப்படாதது என்றும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்கு குழந்தையின் உடல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மோஹித் குப்தா மற்றும் பிரசவத்தின்போது உடனிருந்த சில ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை உரிமையாளர் விஜய் படேல் கூறுகையில், ''பிறந்த குழந்தை நாய் கடித்து இறந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுமையான அறியாமையைக் காட்டுகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x