தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் டிஎஸ்பி தாவிந்தர் சிங்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் டிஎஸ்பி தாவிந்தர் சிங்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதிகளுக்கு அந்த மாநில போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 11-ம் தேதி இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். காரை ஓட்டியவர் போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங். அவருடன் 2 தீவிரவாதிகளும் ஒரு வழக்கறிஞரும் இருந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு தீவிரவாதிகளும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்ப தாவிந்தர் சிங், தானே காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதற்காக ரூ.12 லட்சத்துக்கு அவர் பேரம் பேசியதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்துள்ளது. தற்போது பிடிபட்ட 2 தீவிரவாதிகளையும் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் அவர் மறைத்து வைத்துள்ளார். அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீநகரின் இந்திரா நகர் பகுதியில் மிகப்பெரிய ஆடம்பர மாளிகையை தாவிந்தர் சிங் கட்டி வருகிறார். இந்த வீடு ராணுவ முகாமை ஒட்டி அமைந்துள்ளது. அவரது மூத்த மகள் வங்கதேசத்தில் எம்.பி.பி எஸ். படித்து வருகிறார். 2-வது மகன் ஸ்ரீநகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2001 நாடாளுமன்ற தாக்குதலில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, ஒரு போலீஸ் அதிகாரி தங்களுக்கு உதவியதாகக் கூறினார். அப்போதே தாவிந்தர் சிங் மீது சந்தேகம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் சிக்கவில்லை. சிறப்பாக பணியாற்றியதாக குடியரசுத் தலைவர் விருதையும் தாவிந்தர் சிங் பெற்றுள்ளார். அந்த விருதை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in