படேல் சமூகத்தினர் போராட்டமும் ஓபிசி தலைவர்கள் எதிர்ப்பும்

படேல் சமூகத்தினர் போராட்டமும் ஓபிசி தலைவர்கள் எதிர்ப்பும்
Updated on
1 min read

படேல் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போரட்ட தருணத்தின் பின்னணியில் பல்வேறு உள் அர்த்தம் இருப்பதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் படேல் சமூகத்தினர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றனனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ஹனுமந்த ராவ் கூறும்போது, "இடஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதி முயற்சியே இது. தங்களை எல்லாவிதத்திலும் முன்னேறிய சமூகமாகவே அடையாளம் காட்டிக் கொள்ளும் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்பதன் காரணம் என்ன?

தங்கள் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போரட்ட தருணத்தின் பின்னணியில் பல்வேறு உள் அர்த்தம் இருக்கிறது. இவர்களைப் பார்த்து நாளை தெலங்கானா ரெட்டி சமூகத்தினரும், ஆந்திராவின் கம்மம் சமூகத்தினரும் இடஒதுக்கீடு கோரலாம். ஏன் பிராமணர்கள் கூட இடஒதுக்கீடு கோரும் நிலை உருவாகலாம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "இடஒதுக்கீட்டு பயன்களை ஓ.பி.சி. பிரிவினர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் என்ற வருமானத்தின் அடிப்படையிலான தனியான தரம் பிரிப்புக்கான எல்லையை இன்னும் நீட்டிக்க வேண்டும்.

பல்வேறு அரசு வேலைகளில் ஓபிசி இடஒதுக்கீடு இன்னும் பெரும்பாலான இடங்களில் 8 முதல் 9% ஆகவே மட்டும் உள்ளது. எனவே இத்தகைய நிலையில் இடஒதுக்கீட்டை பங்குபோட்டுக்கொள்ளும் வகையில் படேல் சமூகத்தினரும் இணைய விரும்புவதை நாங்கள் வரவேற்கவில்லை" என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, "குஜராத்தில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. படேல் சமூகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஹர்திக் படேல், அவருடைய போராட்டம் குஜராத்தை மட்டுமே உள்ளடக்கியது என்றால் குஜராத்தி மொழியில் அல்லவா பேசியிருக்க வேண்டும். ஏன் போராட்டக் களத்தில் நின்று கொண்டு இந்தியில் பேசினார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in