Published : 14 Jan 2020 07:02 AM
Last Updated : 14 Jan 2020 07:02 AM

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக, சிவசேனா, திரிணமூல் பங்கேற்கவில்லை: சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் பொதுமக்களை திசை திருப்புகின்றனர்- பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மீது சோனியா குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தில் பொதுமக்களை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திசை திருப்புகின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து சட்டமாக அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மதரீதி யாக துன்புறுத்தப்பட்டு ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, இந்த சட்டம் வகை செய்கிறது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத் துக்கு மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் நேற்று நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என அவர் கூறியிருந்தார். இதுபோலவே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சியும் முடிவு செய்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், எல்ஜேடி கட்சித் தலைவர் சரத் யாதவ், இடதுசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, அகமது படேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சிவசேனா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சிவசேனா ஆட்சி அமைத்திருந்தாலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டது.

மேலும் மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

திமுகவும் பங்கேற்கவில்லை

அதேபோல இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

விடுதலைச் சிறுத்தைக் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் மட்டும் பங்கேற்றார்.

முரணான தகவல்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சோனியா பேசியதாவது:

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தில் மக்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தவறாக வழிநடத்துகின்றனர்.

இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து திசை திருப்பி வருகின்றனர். அவர்கள் பேசியதை அவர்களே மாற்றி மாற்றி கூறி வருகிறார்கள். கலவரத்தைத் தூண்டும் வகையில் அவர்களது பேச்சு இருந்து வருகிறது. மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்பி வருகிறார்கள்.

இந்தியாவில் தற்போது மிக மோசமான பொருளாதார பிரச்சினை நிலவி வருகிறது. நாளுக்கு நாள் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குழம்பி வருகிறார்கள். அதை மறைக்கும் பொருட்டு, பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது,

இந்த நாடு தற்போது கலவரங்களை கண் முன்னே பார்த்து வருகிறது. பாஜகவின் ஆதரவோடு ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அந்த கொடுமையை இந்தியாவே நேரடியாக கண்கொண்டு பார்த்தது. அதன்பின் ஜாமியா மில்லியா, பிஎச்யூ உள்ளிட்ட பல கல்லூரிகளில் கலவரம் நடந்தது. மக்கள் மத்தியில் அரசு வெறுப்பை விதைத்து வருகிறது. மக்களை பிரிக்க பாஜக முயன்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மொத்தமாக உடைக்கப் பார்க்கிறது. அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது.

இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அடக்குமுறையை மத்திய அரசு கையில் எடுக்கிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கு திறமையில்லை என்பதை அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.– பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x