

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு சத்ரபதி சிவாஜி மகாராஜை ஒப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவின் காங்கிரஸ், சிவசேனா கட்சித் தலைவர்கள் பலரும் புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சத்ரபதி வீர சிவாஜியின் சந்ததியினரிடம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும் சஞ்சய் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்
பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் சமீபத்தில், 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்திற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவை புத்தகத்தை விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகை ஆசிரியரும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஒரு பாஜக தலைவர் 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது அவமானகரமானதாக நாம் கருதுகிறோம். பிரதமர் நரேந்திர மோடியை சிவாஜி மகாராஜைப் போலவே சிறந்தவராகக் கருதுகிறாரா என்பதைக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். சத்ரபதி சிவாஜியின் சந்ததியினர் மோடியை அவருடன் ஒப்பிட விரும்பினால் அவர்கள் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
புத்தகத்தின் ஆசிரியர் ஜெய் பகவான் கோயல் ஒரு முறை சிவசேனாவுடன் இணைந்திருந்தார். ஆனால் டெல்லியில் மகாராஷ்டிரா சதானைத் தாக்கியதாகக் கூறப்பட்டதால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி புத்தக அட்டை
நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம். ஆனால் சிவாஜி மகாராஜை யாருடனும் ஒப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல. பிரதமரை திருப்திப்படுத்த சில விசுவாசமான அடிமைகள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள்தான் அவருக்கு (மோடி) பிரச்சினையை உருவாக்குகிறார்கள். பாஜக அவர்களை அகற்ற வேண்டும்.
இப்புத்தகம் காரணமாக பாஜகவில் இருக்கும் மன்னரின் வாரிசுகள் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.
பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்பட்டுள்ளார். எனவே இப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை சிவசேனா எடுத்துள்ளது என்று முதல்வர் உத்தவ் தாக்கரே என்னிடம் கூறினார். நாங்கள் அவருடன் நிற்கிறோம். இந்தப் புத்தகம் தடை செய்யப்பட வேண்டும். அத்தகைய தவறான புத்தகத்தோடு நெருங்காமல் பாஜக அதிகாரபூர்வமாக தள்ளி நிற்க வேண்டும்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ சிவேந்திரராஜே போசலே, மராட்டிய வீர சிவாஜியின் வழித்தோன்றலும், உதயன்ராஜே போசலேவின் உறவினரும் ஆவார். இவர் இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியபோது இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.
சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்ட புத்தகத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்
சதாரா தொகுதி பாஜக எம்எல்ஏ கூறுகையில், "எனது கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக, எந்த அளவிற்கும் தரம் தாழத் தயாராக இருக்கும் அத்தகைய அடிமைகளின் பாதையில் ஒரு தடைக்கல் வைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சிவாஜி மகாராஜுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான ஒப்பீட்டை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
என்சிபியின் மாநில அமைச்சர்கள் சாகன் புஜ்பால் மற்றும் ஜிதேந்திர அவாத், மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் பாஜக தலைவரால் வெளியிடப்பட்ட அத்தகைய புத்தகம் குறித்து முன்னதாக தங்கள் ஏமாற்றம் மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
பாஜகவின் கட்சியின் டெல்லி அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தை பாஜக தலைவர் அமித் ஷா உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று சம்பாஜி ராஜே ஞாயிற்றுக்கிழமை கோரினார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மோடியை தனது புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கோயலுக்கு எதிராக மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே ஞாயிற்றுக்கிழமை நாக்பூர் போலீஸில் புகார் அளித்தார். தனது புகாரில், புத்தக வெளியீட்டாளரும் அதன் விநியோகஸ்தருமான கோயல் மீது காங்கிரஸ் தலைவர் நடவடிக்கை கோரினார்.
மராட்டிய வரலாற்றில் முக்கியமான தலைவராகப் போற்றப்படும் சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.