

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள் உயிருடன் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக பாஜக நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவைத் திரட்டுவதற்கான பேரணியில் உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கலந்துகொண்டார்.
பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
''சிஏஏக்கு எதிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவர்கள் அதோடு நிற்காமல் பிரதமர் மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஒரு சதவீத மக்கள் சிஏஏவை எதிர்க்கின்றனர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள், எங்கள் வரிகளைச் சாப்பிடுகிறார்கள். பின்னர் தலைவர்களுக்கு எதிராக 'முர்தாபாத்' கோஷங்களை எழுப்புகிறார்கள்.
இந்த நாடு அனைத்து மத மக்களுக்கும் சொந்தமானது. ஆனால், பிரதமர் அல்லது முதல்வருக்கு எதிராக முழக்கமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. "நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோஷங்களை எழுப்பினால், நான் உங்களை உயிருடன் அடக்கம் செய்வேன்".
இவ்வாறு உ.பி. அமைச்சர் ரகுராஜ் சிங் பேசினார்.
இவ்வாறு அச்சுறுத்தலாக பேசிய அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இப்பேரணியில் உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றியும் தாக்கிப் பேசினார். அப்போது அவரது சாதியைக் குறிப்பிட்டு ''அவருக்கு ஒரு காந்தன் (குடும்பம்) இல்லை'' என்றும் தெரிவித்ததும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.