

மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூரில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேரணி ஒன்றில் பேசும்போது சிஏஏவை அமல் செய்தே தீருவோம், என்ன எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிஏஏ குறித்து ஆவேசமாகப் பேசிய அமித் ஷா ஒரு கட்டத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் வயதைக் குறிப்பிட்டு, கமல்நாத் ஜி, மத்தியப் பிரதேசத்தில் சிஏஏ அமலாக்கம் செய்யப் படமாட்டாது என்று உரத்தக் குரல் எழுப்புகிரார், கமல்நாத்ஜி இது உங்கள் குரலை எழுப்புவதற்கான வயதல்ல, இந்த வயதில் கத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, மத்தியப் பிரதேச பிரச்சினைகளை முதலில் தீருங்கள், என்று கமல்நாத் வயதைக் கிண்டல் செய்தார்.
இதற்குப் பதில் அளித்த ம.பி.முதல்வர் கமல்நாத், “மக்களுக்கு வயது முக்கியமல்ல மாறாக பணிதான் முக்கியம். ஓராண்டில் எங்கள் அரசு எப்படி பணியாற்றுகிறது என்பதைக் காட்டியுள்ளோம்.
நாங்கள் செய்து முடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம், வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதல்ல. மக்கள் என் பணியைத்தான் பார்க்கின்றனரே தவிர என் வயதையல்ல.
இந்த முதியவனிடம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.