

கேரளாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்றபின் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பாஜக மாநில செயலாளர் ஏ.கே. நஸிர் தாக்கப்பட்டார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகஅளவில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேசமயம் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டனம் பகுதியில் பாஜக சார்பில் நேற்று குடியுரிமைச் சட்ட ஆதரவு பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக செயலாளர் ஏ.கே. நஸிர் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் அங்குள்ள மசூதிக்கு தொழுகை நடத்தச் சென்றார். அப்போது சிலர் அவரை வழிமறித்து உள்ள அனுமதிக்க மாட்டோம் என தகராறு செய்தனர்.
எனினும் மசூதியின் இமாம் தலையிட்டு அவர் மசூதிக்குள் செல்ல அனுமதித்தார். இதையடுத்து மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த நஸிர் மீது சிலர் சேர்களை தூக்கி அடித்து தாக்குதல் நடத்தினர். இதில் அவரது தலை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நஸிர் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.