

உத்தர பிரதேசத்தில் காவல் ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முதல்வர் யோகி ஆதித்யாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தலைநகர் லக்னோ மற்றும் நொய்டா ஆகிய நகரங்களுக்காக காவல் ஆணையர் பதவிக்கு ஏடிஜிபி அளவிலான அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இருநகரங்களிலும் எஸ்பி அந்தஸ்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் தனியாக நியமிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தனியாக விசாரிக்க ஏதுவாக அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி காவல்துறை ஆணையர் பதவி மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட காவலர் பதவி வகிப்போருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு நிகரான அதிகாரம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.