

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியர்களின் குடியுரிமையை பறிக்காது எனவும், இந்த விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று (ஜன.13) தன் ட்விட்டர் பக்கத்தில், "குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்துவிடும் எனவும், தங்கள் குடியுரிமையை பறித்துவிடும் எனவும் பலர் நம்புகின்றனர்.
கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் மட்டுமே உயர்தளங்களில் இருந்து மோடி பேசுகிறார். நாங்கள் ஊடகங்களின் வாயிலாக பேசுகிறோம். ஊடகவியலாளர்களிடம் இருந்து கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஆனால், விமர்சகர்களுடன் பிரதமர் பேசுவதில்லை. அவருடன் பேசுவதற்கு விமர்சகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விமர்சகர்கள் 5 பேருடன் மோடி விவாதிக்க வேண்டும். அவர் பேசுவதைக் கேட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து மக்கள் முடிவெடுக்கட்டும். என் பரிந்துரைக்கு பிரதமர் செவிசாய்ப்பார் என நம்புகிறேன்" என ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.