‘‘துரோகம் செய்துவிட்டு ஆதரவு கோருவதா?’’ - காங்கிரஸ் மீது மாயாவதி கடும் சாடல்

‘‘துரோகம் செய்துவிட்டு ஆதரவு கோருவதா?’’ - காங்கிரஸ் மீது மாயாவதி கடும் சாடல்
Updated on
1 min read

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைக்க ஆதரவு அளித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களை இழுத்த காங்கிரஸ் கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துடன், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என அவர் கூறியிருந்தார். இதுபோலவே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைக்க ஆதரவு அளித்தது. பாஜக ஆட்சியமைக்க கூடாது என்பது தான் எங்கள் எண்ணம். ஆனால் ஆதரவு அளித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை தங்கள் கட்சியில் சேர்ந்து துரோகம் செய்தது காங்கிரஸ். இப்போது அந்த கட்சியுடன் எப்படி இணைந்து பயணிக்க முடியும். குடியுரிமைச் சட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதுபோலவே மாணவர்கள் மீதான தாக்குதலையும் எதிர்க்கிறோம். இருப்பினும் காங்கிரஸுடன் இணைந்து எங்களால் போராட்டம் நடத்த முடியாது’’ எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சியும் முடிவு செய்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in