Last Updated : 08 Aug, 2015 12:15 PM

 

Published : 08 Aug 2015 12:15 PM
Last Updated : 08 Aug 2015 12:15 PM

ஆந்திராவில் முஸ்லிம் மாணவர்கள் தாடி வைத்துக்கொள்ள தடை: சர்ச்சையில் சிக்கிய தேசிய மாணவர் படை

ஆந்திரப் பிரதேசத்தில், தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) உள்ள முஸ்லிம் மாணவர்கள் தாடி வைத்துக்கொள்ள தடை விதித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக மாநில சிறுபான்மையினர் நலவாரியம் என்.சி.சி. இயக்குநர் ஜெனரலுக்கு விளக்கம் கோரி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்.சி.சி. ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில் தேசிய மாணவர் படையில் இருக்கும் சீக்கிய மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் தாடி வைத்துக் கொள்ள அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது குறித்து சிறுபான்மையினர் நலவாரியம் விளக்கம் கோரியுள்ளது

சிறுபான்மையினர் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியதற்கு பின்னணியில் இரண்டு புகார் மனுக்கள் உள்ளன. ஒன்று தாடி வைத்திருந்ததால் என்.சி.சி. முகாமில் அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரி மாணவரின் பெற்றோர் அளித்த புகார். மற்றொன்று ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஹைதராபாத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த புகார்.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகார் மனுவில், "கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட என்.சி.சி. முகாமில் கலந்து கொள்ள எங்கள் மகன் சென்றார். ஆனால், அவர் தாடி வைத்திருந்ததால் வீட்டுக்குச் சென்று தாடியை எடுத்துவிட்டு வருமாறு கமாண்டர் திருப்பி அனுப்பிவிட்டார். இது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த கமாண்டர் ஒரு சுற்றறிக்கையை எங்களிடம் காட்டினார். அது கடந்த 2013-ம் ஆண்டும் ஜூன் மாதம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. அந்த அறிக்கையில், சீக்கியர்கள் தவிர மற்ற மாணவர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதி இல்லை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

என்.சி.சி.யின் சுற்றறிக்கை நகல் தி இந்து(ஆங்கிலம்) இடம் இருக்கிறது. அதில் "சீக்கியர்கள் மட்டும் தாடியை தொங்கவிடாமல் அள்ளி முடிந்து வைத்துக் கொள்ளலாம், மற்றவர்கள் தாடி வைத்துக்கொள்ள அனுமதியில்லை" எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது,

இது குறித்து மாநில சிறுபான்மையினர் நலவாரிய தலைவர் அமித் ரசூல் கான் கூறும்போது, "என்.சி.சி.யின் இந்த பாகுபாடு குறித்து பல்வேறு தருணங்களில் மாணவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், எழுத்துபூர்வமாக புகார் அளிக்குமாறு நான் கோரும் போதெல்லாம் அவர்கள் காணாமல் போய்விடுவர். இந்த முறை மட்டுமே, ஒரு என்.ஜி.ஓவும், பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் பெற்றோரும் எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர்" என்றார்.

இந்த சர்ச்சை குறித்து ஹெல்ப் ஹைதராபாத் என்.ஜி.ஓ அமைப்பின் தலைவர் எஸ்.எம்.காத்ரி கூறும்போது, "என்.சி.சி.யின் இந்த சுற்றறிக்கை முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை அத்துமீறுவதாக இருக்கிறது. பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ ஊக்குவிக்காமல் அவர்கள் மேலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இச்சுற்றறிக்கை வழிசெய்கிறது. மேலும் ஒருவரது மதச் சுதந்திரத்தை அத்துமீறுவதாகவும் உள்ளது" என்றார்.

கர்நாடகாவிலும் ஒரு வழக்கு:

ஆந்திராவைப் போல் கர்நாடக மாநிலத்திலும் என்.சி.சி.யில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் தாடி வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டும் அல் அமீன் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், தாங்கள் தாடி வைத்திருப்பதால் என்.சி.சி. (சி- சர்டிபிகேட்) தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவதாக கூறியிருந்தனர்.

உயர் நீதிமன்ற தலையீட்டின் பேரில் அவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், வழக்கின் இறுதி கட்ட விசாரணையின்போது, என்.சி.சி, அமைப்பு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் 7 மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x