Published : 13 Jan 2020 09:58 AM
Last Updated : 13 Jan 2020 09:58 AM

குடியுரிமை சட்டம் அமல்படுத்தியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்து 5.5 லட்சம் கடிதம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா நெகிழ்ச்சி

குடியுரிமை சட்டம் (சிஏஏ) கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவித்து 5.5 லட்சம் பேர் கடிதம் எழுதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பாஜக மேற்கொண்டு வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் மக்கள் 5.5 லட்சம் பேர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு தபால் கார்டில் கடிதம் எழுதியுள்ளனர்.

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அந்த மேடையில், மோடிக்கு 5.5 லட்சம் மக்கள் நன்றி தெரிவித்து எழுதிய தபால் கார்டுகள், சிஏஏ என்ற ஆங்கில எழுத்து வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேடையின் முன்பும் பாஜக தொண்டர்கள் சிஏஏ என்ற எழுத்து வடிவத்தில் அமர்ந்திருந்தனர். இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு லட்சக்கணக் கான மக்கள் எழுதியகடிதத்தில் இருப்பவை வெறும்வார்த்தைகள் அல்ல. அவை மக்களின் இதயத்தில் இருந்து எழுந்த நன்றியைக் காட்டுகிறது. குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்துக்கு பதிலளிக்கும் வகையில் நமது விழிப்புணர்வு பிரச்சாரம் அமைந்துள்ளது.

ராஜஸ்தானில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினால், அதை ஏன் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x