சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு

சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சாலைப் போக்குவரத்து வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிதின் கட்கரி பேசியதாவது:

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சுமார் மூன்றரை லட்சம் பேர் காயமடைகின்றனர்.

இவ்வாறு, சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளால் மட்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் கூட சாலை விபத்துகளின் எண்ணிக்கையை அரசால் குறைக்க முடியவில்லை. இது, மிகவும் வேதனையான விஷயம். மக்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வும், அதனை பின்பற்ற வேண்டும் என்ற கடமை உணர்வுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in