

மூன்று அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய 6 மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிய பிறகே பாஜக ஓயும், காங்கிரஸ் என்ன எதிர்தாலும் ஓய மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ம.பி. மாநிலம், ஜபல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா கூறியதாவது, “உங்களுக்கும் எனக்கும் இந்த நாட்டுக் குடியுரிமையில் எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை அவர்களுக்கும் உள்ளது, அவர்கள் இந்த நாட்டின் மகன்களும் மகள்களும் ஆவார்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்திய நாட்டின் நாடி என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் தங்கள் வாக்கு வங்கியை எண்ணி அஞ்சுகின்றனர்.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தவறான தகவல்களை முறியடிக்க நாங்கள் இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.
பிரிவினை காலக்கட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றவர்களும் பாகிஸ்தானிலிருந்து சிறுபான்மையினரை வரவேற்றனர். இன்று மனித உரிமைகள் பேசும் சாம்பியன்களை நான் கேட்கிறேன், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக அராஜகங்கள் நடக்கும் போது எங்கே போனார்கள்? எங்கே அவர்களது மனித உரிமைகள் போனது. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளதல்லவா. நங்கனா சாஹிப் மீதான தாக்குதல் உலகின் முன் அராஜகங்களைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டம் குடியுரிமை அளிப்பதற்கானது, பறிப்பதற்கானது அல்ல. காங்கிரஸ் மத அடிப்படையில் பிரிவினை பேசிய போது எங்கள் தலைவர்கள்தான் அவர்களை வரவேற்பதாக சிறுபான்மையினரிடம் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை எங்கே போயிற்று? காது கேளா, வாய்பேச முடியா காங்கிரஸிடம் நான் கேட்கிறேன் எங்கே அந்த மக்கள் காணாமல் போனார்கள்? அவர்கள் மதம் மாற்றப்பட்டனர், கொல்லப்பட்டனர், பெண்களும் வன்முறையை எதிர்கொண்டனர். அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு ஓடி வந்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் மதங்களைத் துறக்கவில்லை. தாங்கள் எந்த மதத்தில் பிறந்தனரோ அதை பின்பற்ற விரும்பினர். தங்கள் மதத்தையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள அராஜகத்திடமிருந்து இங்கு வந்து தஞ்சமடைந்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் சிஏஏவை எதிர்க்கின்றனர், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதாரம் கேட்கின்றனர், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரிகள் அநீதியை எதிர்கொள்கின்றனர் என்கின்றனர், இவையெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான்.
ஜேஎன்யு மாணவர்கள் சிலர் நாட்டை ஆயிரம் பகுதிகளாக உடைக்க வேண்டும் என்கின்றனர், தேச விரோத கோஷங்களை எழுப்புகின்றனர், அவர்களை சிறையில் தள்ள வேண்டாமா?” இவ்வாறு ஆவேசமாகப் பேசினார் அமித் ஷா.