

கொல்கத்தாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து சிலர் அரசியல் காரணங்களுக்காக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று சாடினார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்ததினமான இன்று அவர் கொல்கத்தாவில் இளைஞர்களிடம் பேசிய போது, “குடியரிமைச் சட்டம் குடியுரிமை அளிப்பதேயன்றி குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
“குடியுரிமைச் சட்டத்தில் நாங்கள் திருத்தம் மட்டுமே கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் அடக்குமுறையைச் சந்தித்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது எளிதாக அமையும் என்பதற்காகத்தான்.
காந்திஜி உட்பட பல தலைவர்கள் அண்டை நாடுகளில் ஒடுக்குதலுக்கு ஆளான மக்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் விரும்பியதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். நாங்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. எந்த ஒருவரும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அல்லது இல்லாதவராக இருந்தாலும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்கெனவே உள்ள் நடைமுறைகளின் படி குடியுரிமை கோரலாம்.
கடந்த 70 ஆண்டுகளாக தங்கள் சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் செய்த அராஜகங்களின் முடிவுதான் இந்த சட்டத்திருத்தம்.
சிலர் வேண்டுமென்றே அரசியல் ஆதாயங்களுக்காக சிஏஏ பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்திருக்கின்றனர், ஆனால் சிலர் தவறான கருத்துக்களினால் வழிநடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு நாம்தான் புரிய வைக்க வேண்டும்” என்றார் பிரதமர் மோடி.