

இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றை அதிகாரப் போராட்டங்களாகவும், ,தொடர் போர்கள் என்பதாகவும் குறுக்கல்வாதம் செய்து விட்டனர், கொந்தளிப்பான காலக்கட்டங்களில் மக்கள் இதனை எப்படி கையாண்டனர் என்ற விஷயத்தை வரலாற்றாசிரியர்கள் புறக்கணித்து விட்டனர் என்று பிரதமர் மோடி கூர்மையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொல்கத்தாவுக்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி 1833ம் ஆண்டு கட்டப்பட்ட கரன்ஸி கட்டிடம், மெட் கால்ஃபே ஹால், பெல்வதெரெ ஹவுஸ் போன்ற காலனிய ஆட்சிக் கால கட்டிடங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
கரன்சி கட்டிடத்தில் பேசிய பிரதமர் மோடி ரவீந்திரநாத் தாகூர் 1903-ல் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு ‘அரசியல் என்பது நிலையற்றது. ஆனால் ஒரு நாகரீகத்தின் வரலாறு என்பது அதன் கலை மற்றும் பண்பாட்டின் வழியாக பிரதிபலிப்பது’ என்றார்.
“வெளியிலிருந்து சிலர் வந்தனர், தந்தையர், தனயர், சகோதரர்கள் அதிகாரப் போட்டியில் ஒருவரையொருவர் அழித்துக் கொண்டனர், அடுத்தடுத்து அதிகாரத்தில் யார் என்ற போராட்டம் தொடர்ந்தது. இது இந்திய வரலாறு அல்ல, நான் இதைச் சொல்லவில்லை, குருதேவ் கூறுகிறார்” என்றார் மோடி.
சுமார் 20 நிமிடம் பேசிய பிரதமர் இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டு ஆதாரங்களை உலகிற்கு புதிய அதிர்வுத்தன்மையுடன் முக்கியாம்சப்படுத்தி உலக சுற்றுலாவுக்காக இந்திய பாரம்பரிய பண்பாட்டு ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்றார்.
“இந்தியப் பாரம்பரியச் சின்னங்கள், ஸ்தலங்களுக்கான சுற்றுலாப்பிரதேசமாக உருவாக்கப்படவேண்டும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.
இந்தியப் பாரம்பரியக் கட்டிடச்சின்னங்களைப் பராமரிப்பதோடு இந்தக் கட்டுமானங்களை நவீனமயப்படுத்தும் முயற்சிகளும் செய்ய்யப்பட்டு வருவதை மோடி சுட்டிக்காட்டினார்.
“இந்தச் சிந்தனையுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கட்டிடங்களை மத்திய அரசு புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. கொல்கத்தாவில் தொடங்கி, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்களையும் புதுப்பித்து இங்கு புதிய காட்சி அரங்கங்களை உருவாக்கி, இயல், இசை, நாடகத்திற்கான ஒரு மையமாக மாற்றப்படவுள்ளது.
கொல்கத்தா இந்திய மியூசியம் சர்வதேசத் தரத்துடன் ‘தத்ரூப மியூசியங்களாக’ மாற்றப்படும்” என்றார். மேலும் இந்தியப் பாரம்பரியப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு பல்கலைக் கழக அந்தஸ்து வழங்குவதும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பிப்லாபி பாரத் என்ற மியூசியம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மகா வீரர்களான சுபாஷ் சந்திர போஸ், அரபிந்தோ கோஷ், தேஷ்பந்து சித்தரஞ்சன், பினய்-பாதல்-பினேஷ் உள்ளிட்டோருக்கு இடமளிக்க வழிவகை செய்யப்படும், என்றார் மோடி.