

மத்திய சிறுபான்மை பல்கலைக்கழகமான ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, டெல்லி போலீஸார் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலையும், குடியுரிமை சட்டத்தையும் கண்டித்து ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அன்றாடம் போராட்டம் நடத்துகின்றனர். இதை அவர்கள் அறவழியில் நடத்த வலியுறுத்தும் விதமாக, அங்கு காந்தி பற்றிய புகைபடக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, மாணவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், தேசிய இளைஞர் அமைப்பின் தலைவருமான ரூபல்பிரபாகர் கூறியதாவது: அமைதியான போராட்டங்களுடன் காந்தியின் கொள்கைகளுக்கு நேரடியான தொடர்பு உள்ளது. மதத்தின் பெயரால் நம் நாடு பிரிக்கப்பட்டதை காந்தி எதிர்த்தார்.
இதே நோக்கத்தில் இருக்கும் இந்த சட்டத்தை எதிர்க்கும் மாணவர்கள், காந்தியையும் புரிந்துகொள்வது அவசியம். காந்தியின் கருத்தின்படி, பொதுமக்கள் நலன் கருதாத சிவில் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை. இதற்காக, அரசு வழங்கும் சிறைவாசம் உள்ளிட்ட தண்டனைகளையும் ஏற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பதை இந்த புகைப்படக்கண்காட்சி நினைவுகூர்கிறது என அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மத்திய அரசுபல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதைவிட அதிகமாக,டெல்லியின் தேசிய காந்தி அருங்காட்சியகம் பல விழாக்களை நடத்தி வருகிறது. இவர்களிடம் காந்தி வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களும் ஏராளமாக உள்ளன.
இவற்றில் குறிப்பிட்ட இடத்திற்கும், நிகழ்விற்கும் பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து கண்காட்சி அமைக்கும் பணியைசெய்து வருகிறது. அதை அமைப்பவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் புகைப்படங்களை விநியோகித்தும் வருகிறது. அந்த வகையில், ஜாமியாவின் போராட்டக்களத்தையும் காந்தியின் புகைப்படக் கண்காட்சி விட்டு வைக்கவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநரான ஏ.அண்ணாமலை கூறும்போது, ‘சட்டமறுப்பு போராட்டங்கள் அகிம்சை வடிவிலானது என்ற காந்தியின் கூற்றை மாணவர்கள் அறிவது அவசியம்.
மக்களுக்கு அநீதி விளைவிக்கும் எனக் கருதப்படும் சிவில் சட்டத்தை எதிர்ப்பதும், உடன்பட மறுப்பதும் ஜனநாயக அடிப்படை உரிமை என்பதும் அவரது கருத்து. இதுபோல் காந்தியின் வழியில் முதன்முறையாக நம் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்கள் தடம்மாறிச் சென்று விடாமல் இந்த புகைப்படக் கண்காட்சி ஒரு வழிகாட்டுதலாக அமையும்’ எனத் தெரிவித்தார்.