பொங்கல் விடுமுறையால் திருப்பதியில் குவியும் பக்தர்கள்: 20-ம் தேதி முதல் இலவச லட்டு

பொங்கல் விடுமுறையால் திருப்பதியில் குவியும் பக்தர்கள்: 20-ம் தேதி முதல் இலவச லட்டு
Updated on
1 min read

வார இறுதி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகரித்தது. இதனால் நேற்று சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி முதல் தொடர்ந்து விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பொங்கல் பண்டிகை நாட்களில் மேலும் அதிக நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், வரும் 20-ம் தேதி முதல் திருமலைக்கு வந்து சுவாமியை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தலா ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான லட்டு பிரசாதங்களை தயாராக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை வழிபடுவதால், அந்த அளவுக்கு இலவச லட்டு பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி வழங்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லட்டு வீதம் மாதத்துக்கு சுமார் 22 லட்சம் லட்டு பிரசாதங்கள் தேவைப்படுகிறது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு லட்டு பிரசாதங்களை தயாரித்து வருகின்றனர். இதுதவிர, கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு, ரூ.50-க்கு ஒரு லட்டு வீதம் வழங் கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in