

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெளியே இடதுசாரி அமைப்பினர், குடியுரிமைச் சட்ட எதிர்பாளர்கள் உட்பட பலரும் கூடி பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று மாலை கொல்கத்தா வந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெளியே இடதுசாரி அமைப்பினர், குடியுரிமைச் சட்ட எதிர்பாளர்கள் உட்பட பலரும் கூடி பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.