

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கிறார்.
மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகிறார். பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக மம்தா விமர்சித்து வரும் நிலையில், மோடியும் மம்தாவும் 2 நிகழ்ச்சிகளில் ஒரே மேடையில் சந்தித்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
பின்னர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தனேன்’’ எனக் கூறினார்.