நாட்டிலேயே சாலை விபத்துகள்,  உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைவு: நிதின் கட்கரி பேச்சு

நாக்பூர் விழாவில் நிதின் கட்கரி உரையாற்றும் காட்சி.
நாக்பூர் விழாவில் நிதின் கட்கரி உரையாற்றும் காட்சி.
Updated on
1 min read

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் விபத்துகள் குறைந்துள்ளன என்று நாக்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

இன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா ஜனவரி 17 ஆம் தேதி நிறைவடையும்.

சிஏஏ விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாக்பூர் வந்திருந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, முன்னதாக நாக்பூரில் அரசு சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா ஒன்றிலும் கலந்துகொண்டார்.

சாலை பாதுகாப்பு வார விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது:

''நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துகள் நடைபெறுகின்றன. இவற்றில் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாயினர். 2.5-3 லட்சம் பேர் வரை காயமடைகிறார்கள். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு இரண்டு சதவீதமாகும். தவிர, சாலை விபத்துகளில் பலியானவர்களில் 62 சதவீதம் பேர் 18-35 வயதுக்குட்பட்டவர்கள்.

நான் என்னதான் புலம்பினாலும் அதிக முயற்சி செய்தாலும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

அதேநேரம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 29 சதவீதம், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 சதவீதம் என கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தை நான் பாராட்டுகிறேன்.

மக்களிடையே போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதும், காவல்துறை, ஆர்டிஓக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் ஐக்கிய முயற்சிகள் சாலை விபத்துகளைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன''.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in