

கர்நாடகாவில் 100 ரூபாய் நோட்டுகளைக் கேட்டால் 500 ரூபாய் தாள்களை வழங்கிய கனரா வங்கியின் ஏடிஎம்மால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ரூபாய் நோட்டுகளைப் பெற்றுச் சென்றவர்களிடமிருந்து அதிகப்படியான பணத்தை திரும்பப் பெறுவதற்காக அதிகாரிகள் திக்குமுக்காடினர்.
ஏடிஎம்மில் பணம் கையாளும் நிறுவனம் மக்களை முட்டாளாக்கிவிட்டது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெங்களூருக்கு தென்மேற்கே 268 கி.மீ. தொலைவில் உள்ள மடிகேரி என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடகா கனரா வங்கியின் ஏடிஎம்மிலிருந்துதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து குடகு காவல் கண்காளிப்பாளர் சுமன் டி. பென்னேகர் கூறியதாவது:
''குடகு மாவட்டத்தின் மடிகேரி நகரில் ஏடிஎம் செயலிழந்தபோது ஒரு வாடிக்கையாளர் ரூ.100 பணம் பெற முயன்ற போதெல்லாம், ஏடிஎம் தொடர்ந்து ரூ.500 நோட்டுகளையே வழங்கியது. இன்னும் சிலருக்கும் இப்படியே நடந்துள்ளது.
அந்தக் குறிப்பிட்ட ஏடிஎம் வாயிலாக பணத்தைக் கையாளும் ஏஜென்ஸி, மக்களிடம் தனது தவறான செயல்பாட்டினால் மக்களிடம் ஒரு முட்டாள்தனத்தை உருவாக்கிவிட்டது. ரூ.100 நோட்டுகளுக்குப் பதிலாக, ரூ.500 நோட்டுகளை நிரப்பிவிட்டது. இதனால் ரூ.1.7 லட்சத்தை மக்கள் பெற்றுச் சென்றனர்.
யாரோ அதை கனரா வங்கியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். வங்கி இதுகுறித்து முதலில் காவல்துறையை அணுகவில்லை, ஆனால் பணத்தை மீட்க அதன் சொந்த வழிகளில் முயலலாம் என நினைத்துச் செயல்பட்டது. ஆனால் கடைசியாக காவல்துறையை அவர்கள் அழைத்தனர்.
ரூ.500 நோட்டுகளைப் பெற்றுச் சென்றவர்களை வங்கி அடையாளம் கண்டு பணத்தை மீட்டெடுக்க முயன்று வருகிறது''.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் சுமன் டி. பென்னேகர் தெரிவித்தார்.