

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நவம்பர் 20 முதல் டிசம்பர் 20-ம் தேதிவரை தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்கள் மட்டுமே பெற்றது.
இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி சார்பில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு, ஜார்க்கண்ட் விகாஸ்மோர்ச்சா கட்சியின் 3 எம்எல்ஏக்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஏராளமான அலுவல்கள் இருப்பதாலும், பணி நெருக்கடியாலும் தன்னால் பங்கேற்க இயலவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலத்தின் நலன் மற்றும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைப்பதற்காக பிரதமர் மோடியை சந்தித்தேன். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.