

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்க்க தனது மக்களவை எம்.பி.க்களைக் களம் இறக்க பாஜக திட்டமிடுகிறது.
இரண்டாவது முறையாக டெல்லியில் முதல்வரான கேஜ்ரிவால் முதன்முறையாக தனது முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்கிறார். டெல்லிவாசிகளுக்கான கேஜ்ரிவாலின் பல்வேறு நலத்திட்டங்களால் அவருக்கு இருந்த ஆதரவு நீடிக்கும் நிலை தெரிகிறது.
இதன் காரணமாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் பாஜகவிற்கு கடும் போட்டி நிகழ உள்ளது. இங்கு தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியால் மும்முனைப்போட்டிக்கான வாய்ப்புகளும் தெரிகின்றன.
எனவே, பாஜகவின் மக்களவை எம்.பி.க்களான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், மீனாட்சி லேக்கி, பர்வேஷ் வர்மா மற்றும் ரமேஷ் பிதூரி ஆகியோரையும் போட்டியிட வைக்க பாஜக முயல்கிறது. இதன் மூலம், தன் எம்.பி.க்களின் செல்வாக்கு அவர்களுக்கு மட்டும் இன்றி சுற்றியுள்ள தொகுதிகளிலும் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும் என பாஜக நம்புகிறது.
குறிப்பாக கேஜ்ரிவாலைத் தோற்கடிக்கவும் பாஜக தீவிர முயற்சி எடுத்துள்ளது. இவரை எதிர்க்க தனது மக்களவை எம்.பி.க்களில் ஒருவரையே போட்டியிட வைக்கவும் பாஜக திட்டமிடுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் டெல்லி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''டெல்லியைப் பொறுத்தவரை எம்எல்ஏக்களை விட எம்.பி.க்களுக்கு செல்வாக்கு அதிகம். இதன் லாபத்தையே நம் கட்சி இந்தத் தேர்தலில் பணயம் வைக்க உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்பது இதற்கு சாதகமாக உள்ளது. தோல்விக்குப் பின் எம்.பி.யின் மத்திய அமைச்சர் பதவிக்கும் சிக்கல் இருக்காது'' எனத் தெரிவித்தனர்.
இதேபோன்ற சூழலில்தான் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் மக்களவைத் தேர்தலிலும் பாஜக தன் எம்எல்ஏக்களைப் போட்டியிட வைத்து பலனையும் பெற்றது. இதை பாஜக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வேறுவகையில் கையாள முயல்கிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி முயன்றது. இதற்கு பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லியில் அக்கட்சி தம்மை எதிர்ப்பதால் காங்கிரஸ் மறுத்து விட்டது.
இக்கூட்டணியின் தாக்கம் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வந்து விடும் என அஞ்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. எனினும், இதன் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது.
டெல்லி தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு விவசாயிகளின் திருநாளான அது மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுவது காரணம் ஆகும்.