

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் ஒரு மரம் கூட வெட்டப்படாது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.
மத்திய மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை பால் தாக்கரேவின் மகனும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்படாது. பதிலாக உள்நாட்டு மரக்கன்றுகள் அதிக எண்ணிக்கையில் நடப்படும்” என்றார்.
பிரியதர்ஷினி பூங்காவில் பால் தாக்கரேவின் நினைவிடம் கட்டுவதற்காக சுமார் 1000 மரங்கள் வெட்டப்படும் என வெளியான ஊடக தகவலை சுட்டிக்காட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கடந்த மாதம் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து நினைவிடத்துக்காக ஒரு மரம் கூட வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி சிவசேனா ஆளும் அவுரங்காபாத் மாநகராட்சியை உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.