பிறப்பு சான்றிதழ்களை பெற வட மாநிலங்களில் அலைமோதும் மக்கள்

பிறப்பு சான்றிதழ்களை பெற வட மாநிலங்களில் அலைமோதும் மக்கள்
Updated on
1 min read

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அதேவேளையில், தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்காக பிறப்பு சான்றிதழ்களை பெறுவற்கு வட மாநிலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு (முஸ்லிம் அல்லோதோர்) குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது பெரிய அளவில் வன்முறைகள் வெடித்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இருந்தபோதிலும், இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டி பிறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்காக வட மாநிலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கி செல்கின்றனர்.

முஸ்லிம்களே அதிகம்

லக்னோ நகராட்சி ஆணையர் இந்திராமணி திரிபாதி கூறுகையில், "பிறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கு இந்து, கிறிஸ்தவ மதத்தினரை விட முஸ்லிம் மக்களே தீவிரம் காட்டி வருகின்றனர். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லக்னோ நகராட்சியில் இருந்து 2,012 பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. அதேசமயத்தில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 6,193 பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in