Published : 11 Jan 2020 09:23 AM
Last Updated : 11 Jan 2020 09:23 AM

அமராவதி தலைநகரை மாற்ற எதிர்ப்பு: விஜயவாடாவில் பெண்கள் மீது போலீஸ் தடியடி

ஆந்திராவில் அமராவதி தலைநகரை மாற்றக் கூடாது என்பதற்காக விஜயவாடாவில் நேற்று கனகதுர்கையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற பெண்களை போலீஸார் விரட்டி அடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர். மேலும், ஏராளமான பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், அமராவதி பகுதியில் தலைநகரம் குறித்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமையலாம் என அறிக்கை விட்டது முதல், தலைநகர் பிரச்சினை தலை தூக்கியது. அமராவதிக்கு தாமாக முன்வந்து நிலம் வழங்கிய விவசாய குடும்பத்தினர் அனைவரும், இதனால் அதிர்ச்சி அடைந்து, போராட்டத்தில் கள மிறங்கியுள்ளனர். சிறுவர்கள் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் இப்போராட்டத்தை கடந்த 23 நாட்களாக கடைபிடித்து வருகின்றனர். இவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமராவதியை மாற்றக் கூடாது என நேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தூளூரிலிருந்து விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலுக்கு, நேற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால், விஜயவாடா உட்பட பல இடங்களில் 144 போலீஸ் தடை உத்தரவு உள்ளதால், ஊர்வலத்தை அனுமதிக்க முடியாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆயினும் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார். இதன் காரணமாக போலீஸாருக்கும், பெண்களுக்குமிடையே பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், பெண்களை கலைந்து போக கூறியும் கேட்காததால், போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்கள் பலத்த காயமடைந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். ஆயினும் பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் போலீஸார் ஏற்றினர்.

மகளிர் ஆணையம் கண்டனம்

தேசிய பெண்கள் ஆணைய செயலாளர் ரேகா ஷர்மா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘‘பெண்களை தாக்கும் உரிமையை போலீஸாருக்கு யார் வழங்கியது ? சனிக்கிழமை (இன்று) தேசிய பெண்கள் ஆணையம் சார்பில் இது குறித்து விசாரணை நடத்தப் படும். இதில் போலீஸார் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்’’ என ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். என். மகேஷ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x