

சென்ற 2018-19-ம் நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருமானம் ரூ.2,410 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும்.
2018-19-ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி சென்ற நிதியாண்டில் பாஜகவின் வருமானம் ரூ.2,410 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் பாஜகவின் வருமானம் சுமார் ரூ.1,027 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது 134 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருவாயில் ரூ.1,450 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.210 கோடியாக இருந்தது. சென்ற நிதியாண்டில் பாஜக ரூ.1,005 கோடி செலவிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் பாஜக ரூ.758 கோடி செலவிட்ட நிலையில் அது 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி சென்ற 2018-19-ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.918 கோடி என கூறியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட நான்கரை மடங்கு அதிகமாகும். மொத்த வருமானத்தில் இக்கட்சி ரூ.383 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.5 கோடி மட்டுமே பெற்றிருந்த நிலையில், இது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில் காங்கிரஸ் ரூ.470 கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது.-பிடிஐ