

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெகன்மோகனின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 முதல் 2009 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்போது சட்டவிரோத வழிகளில் ஜெகன் சொத்துகளை குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜெகன் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2011-ல் சிபிஐ 11 வழக்குகளை பதிவு செய்தது.
இது தொடர்பாக 2012 மே மாதம் கைது செய்யப்பட்ட ஜெகன், 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன் கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். முதல்வருக்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெகன் கோரினார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஜனவரி 10-ம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்பேரில் ஜெகன் நேற்று தனி விமானம் மூலம் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் வந்தார். பிறகு நாம்பல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். இவருடன் பட்டய கணக்காளரும் எய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.யுமான விஜய்சாய் ரெட்டியும் ஆஜரானார். சுமார் 2 மணி நேரம் இவர்கள் நீதிமன்றத்தில் இருந்தனர்.
அப்போது வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இவர்கள் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து. வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள ஜெகன் சாட்சியங்களை அழிக்கவும் சாட்சிகளை அச்சுறுத்தவும் முயற்சிக்கலாம் என்பதால் அவருக்கு விலக்கு அளிக்க கூடாது என சிபிஐ வாதிட்டது.இறுதியில் இவ்வழக்கு வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. என்.மகேஷ்குமார்