

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பயணம் செய்தார். குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் சிறை சென்றவர்களை அவர் சந்தித்தார்.
உ.பி. விவகாரங்களுக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, அம்மாநில பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் உ.பி.யில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு பிரியங்கா நேற்று சென்றார். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் சிறை சென்ற சமூக செயற்பாட்டாளர்களான ஏக்தா சேகர் சிங், அவரது கணவர் ரவி சேகரை பிரியங்கா சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஏக்தாவின் விடுதலைக்காக அவரது ஒன்றரை வயது மகள் காத்திருந்தாள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கணவன் - மனைவி இருவரும் விவரித்தனர். அமைதி வழியில் போராடிய அவர்கள், 15 நாள் சிறை தண்டனை அனுபவித்தனர். கடுமையான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக அரசு செயல்படும் போதெல்லாம் இவர்கள் நாட்டுக்காக குரல் எழுப்புகின்றனர், போராடுகின்றனர். இதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலிலும் அவர் வழி பட்டார்.