

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜக எப்படி லோக்சபா தேர்தலில் ‘மோடிக்கு எதிராக யார் பிரதமர் வேட்பாளர்?’என்று கேட்டு எதிர்க்கட்சிகளை முறியடித்ததோ அதே வழியில் ஆம் ஆத்மிக் கட்சி ‘கேஜ்ரிவாலுக்கு எதிராக யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற பிரச்சார உத்தியைக் கடைபிடித்துள்ளது.
இந்த பிரச்சார உத்தி வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக டெல்லி குழுவில் உட்கட்சிப் பூசல் இருக்கிறது என்று பாஜக மீது மிகவும் நுட்பமான தாக்குதலை நடத்தி வருகிறது. மனோஜ் திவாரி, ராஜ்யசபா எம்பி விஜய் கோயல், டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான விஜேந்தர் கோயல் ஆகிய மூவருக்கும் இடையே பாஜக முதல்வர் வேட்பாளருக்கான கடும் போட்டி நிலவுகிறது என்கிறது ஆம் ஆத்மி.
இவர்கள் மூவரோடு இன்னும் 4 பேரையும் சேர்த்து ஆம் ஆத்மி பாஜக முதல்வர் போட்டியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியே கவுதம் கம்பீர் உட்பட இந்த 7 பேரையும் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆம் ஆத்மி போஸ்டர் அடித்துள்ளது.
ஆம் ஆத்மி தன் ட்விட்டரில், “அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிடுவது யார்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை முதல்வர் யார் என்று அறிவிக்காமலேயே மோடியின் ஆளுமையில் சில சட்டப்பேரவை தேர்தலகளில் வெற்றி பெற்றுள்ளது, மிகப்பெரிய உதாரணம் உத்தரப் பிரதேச 2017 சட்டப்பேரவைத் தேர்தல்.
டெல்லியில் ஆட்சியைப் பிடித்தால் யார் முதல்வர் என்று அமித் ஷா முடிவெடுப்பார் என்றே பாஜக தரப்பு கூறுகிறது.
இந்தப் புதிய பிரச்சார உத்தியான ‘கேஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிடுவது யார்?’ என்பது குறித்து அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கேட்ட போது, “நாங்கள் கேட்கவில்லை, மக்கள் இப்படிக் கேட்கிறார்கள். முதல்வராக அவர்களிடத்தில் ஆள் இல்லை. மக்கள் கேட்பதால் நாங்கள் இதே கேள்வியைக் கேட்கிறோம். யார் முதல்வர் என்பதை மக்கள் அறிய வேண்டும்” என்றார்.
பிப்ரவரி 8 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக மோடியின் உருவத்தை நம்பியே உள்ளது என்பது பற்றிய கேள்விக்கு அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த உத்தி பாஜகவைப் பார்த்து காப்பி அடித்ததல்ல, பாஜக வேறு, ஆம் ஆத்மி வேறு. பாஜகவுக்கு இருப்பதெல்லாம் மோடி மட்டுமே. ஆனால் மோடி முதல்வராக முடியுமா? அவரது முகத்தை பயன்படுத்தினாலும் யார் முதல்வர் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.
நாங்கள் தேர்தலை எங்கள் ஆட்சியின் நல்ல விளைவுகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதன் மூலம் எதிர்கொள்கிறோம். கேஜ்ரிவாலின் பெயர் அல்ல, மக்களது தினசரி வாழ்வில் கொண்டு வந்த மாற்றத்துக்காக அவர்கள் இந்தப் பெயரை விரும்புகின்றனர், என்றார் கேஜ்ரிவால்.
இந்தத் தேர்தல் பல்வேறு காரணங்களினால் ஆம் ஆத்மி, பாஜக இரண்டிற்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2015 தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 3 இடங்கள் பாஜக. ஆனால் டெல்லியை 15 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அங்கு பூஜ்ஜியமானது.